Wednesday, April 22, 2020

களனியில் விபீஷணன் கோயிலும், இந்து சமயச் சின்னங்களும்

களனியில் விபீஷணன் கோயிலும், இந்து சமயச் சின்னங்களும் 


என்.கே.எஸ்.திருச்செல்வம்
NKS/147     22 April 2020 


கொழும்பு நகரின் வடகிழக்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் களனிய அமைந்துள்ளது. இங்கு களனி கங்கையில் வட கரையில் விபீஷ ணன் கோயில் அமைந்துள்ளது.இதன் அருகில் பிரசித்தி பெற்ற களனி விஹாரை உள்ளது.

கடற்கோளினால் அழிந்து போன கல்யாணி இராச்சியம்
இன்று களனிய என்றழைக்கப்படும் இப்பிரதேசம் மிகப் புராதன காலத்தில் கல் யாணி என்ற பெயரைப் பெற்று விளங்கியது. தற் போது உள்ள களனியவின் மேற்கில் சுமார் 9 மைல் தொலைவில் இவ்விராச்சியம் அமைந்திருந்தது. பொ.ஆ..மு. 200 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடற்கோளின் கோரத்தினால் இவ்விராச்சியம் அழிந்து போனது. கல்யாணி இராச்சியத்திலிருந்த 970 மீனவக் கிராமங்களும் 400 முத்துக் குளிப்போர் கிராமங்களும் கடலில் அமிழ்ந்து போயின என இராஜாவலிய கூறுகி றது. மூன்றாவது தடவையாக ஏற்பட்ட தாகக் கருதப்படும் இக்கடற்கோளில் இலங் கையின் நிலப்பரப்பின் பன்னிரெண்டில் பதினொரு பகுதியை கடல் காவுகொண்டு விட்ட தாகத் தெரியவருகிறது.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்
இலங்கையில் இராமாயண வரலாற்றுடன் தொடர்புள்ள இடங்களில் களனியும் ஒன் றாகும். இராமர் சீதையை மீட்கும் பொருட்டு இலங் கைக்கு வந்து இராவணனுடன் யுத்தம் புரியும் சமயம் அவனது சகோதரனான விபீஷணன் இராவணனுக்கு எதிராக செயல்பட்டு இராமருக்கு உதவிபுரிந்தான். யுத்தத்தில் இராவணன் கொல்லப்பட்ட தும் விபீஷணனுக்கு பட்டம் சூட்டும்படி கூறிவிட்டு இலங்கையின் ஆட்சி அதிகார த்தை விபீஷணனிடம் ஒப்படைத்துவிட்டு இராமர் நாடு திரும்பினார் என இராமாயணம் கூறுகிறது. லட்சுமணன் விபீசணனுக்கு பட்டம் சூடும் காட்சி இங்குள்ள சிலை மனையின் பின்பக்கம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மன்னனான விபீஷணன் களனியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். இயக்கர் குலத்தைச் சேர்ந்த விபீ ஷணன் இறந்த பின்பு மீண்டும் தெய்வமாகப் பிறந்து களனியில் குடிகொண்டதாகவும், பின்பு பொ.ஆ..மு. 3ஆம் நூற்றாண்டில் களனி இராச்சியத்தை ஆட்சி செய்த யட்டாலதீசன் எனும் மன்னன் இங்கு விபீஷணனுக்குக் கோயில் கட்டி வழிபட்டு வந்ததாகவும் வரலாறு கூறுகிறது.  இதே காலப் பகுதியில் தான் களனியில் பௌத்த தூபியும் இம்மன்னனால் கட்டப்பட்டது.

இயக்கரும் நாகரும் வாழ்ந்த களனி இராச்சியம்
பொ.ஆ..மு. 6 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இப்பகுதியை மணி யக்கிரன் எனும் நாக அரசன் ஆட்சி செய்து வந்தான்.  இதே காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஓர் நாக அரசு மேலோங்கி விளங்கியது. மகோதரன், சுலோதரன் எனும் நாகவம்சத்தினர் நாகதீபத்தை  ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் இளைய சகோதரனே களனி இராச்சி யத்தை ஆண்டு வந்த மணியக்கிரனாவான். இவர்கள் அனைவரும் நாக வழிபாடு செய்த  நாக குலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகதீபத்தை ஆட்சி செய்த மகோதரன், சுலோதரன் ஆகிய இருவருக் குமிடையில் ஏற்பட்ட மணிமுடிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பத ற்காக புத்தபகவான் இலங் கைக்கு வருகை தந்ததாகவும், அப்போது மணியக்கிரன் அவரை தனது இராச்சியத்தி ற்கு வருகை தருமாறு வேண்டிக் கொண்டதாகவும் புத்தபகவான் மீண்டும் இலங்கைக்கு வந்தபோது களனிக்கு விஜயம் செய்ததாகவும் பாளி இலக்கிய நூல் கள் கூறுகின்றன.

இராமர் காலத்தில் களனியில் குருகுலம்
இலங்கையை விபீஷணன் கையில் ஒப்படைத்து விட்டு நாடு திரும் பிய ராமர் அங்கு குருநாடு என்னுமிடத்திலிருந்து ஒரு இளவரசனை யும், இளவரசியையும் உயர்குடி மக்களையும், பிராமண புரோகிதர் களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் என வும் இலங்கையில் இவர்கள் தங்கியிருந்த இடம் குருநாடு என்ற பெயரைப் பெற்றிரு ந்ததாகவும் நூல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இவர்கள் இங்கு ஓர் குருகுல த்தை அமைத்து நிர்வகித்து வந்ததாகவும் குரு குலம் அமைந்திருந்த இடமேதற்போது 'குருகுலாவ’ என்றழைக் கப்படும் இடம் எனவும் கூறப்படுகிறது. இந்த ‘குருகுலாவ’ என்னு மிடம் ராகமைக்கு அருகில் உள்ளது.


இன்றைய விபீஷணன் கோயில்
களனி விஹாரையில் முன்வாசல் தோரணத்தைக் கடந்ததும் வலது பக்கம் ஓர் சிறிய கட்டிடம் காணப்படுகிறது. இதுவே இன்று நாம் காணும் விபீஷணன் கோயிலாகும். இன்று இங்கு கப்புறாளைகள் பூஜைகளை செய்து வருகின்றனர். மிக மிக அரிதாகவே இந்துக்கள் இங்கு சென்று வழிபடுகின்றனர். ஆனால் களனி விஹாரையைத் தரிசிக்க வரும் பௌத்தர்கள் விபீஷணன்  கோயிலை தரிசிக்கத் தவறுவதில்லை. விபீஷணக் கடவுளுக்கு பெருந்தொகையான பௌத்தர்கள் நேர்த்திக் கடன்களை வைத்து பூஜைகள் செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் தேவாரங்கள் பாடப்பட்டும், தேவதாசி கள் நடனமாடியும், பிராமணர்கள் மந்திரம் ஓதியும், மேளதாள, சங்கொலி, முழங்கியும் பூஜைகள் நடைபெற்ற களனி விபீஷணன் கோயிலின் இன்றைய நிலை இதுதான்.

இலங்கையின் காவல் தெய்வங்களாக முருகனும், விஷ்ணுவும், சுமனசமனும் இலங்கை மக்களால் பூஜிக்கப்பட்டு வந்தனர்.ஆனால், இவர்களுடன் விபீஷணனும் 12 ஆம் நூற்றாண்டு முதல் சேர்க்கப்பட் டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

12,000 தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம்.
கஜபாகு மன்னனால் சோழநாட்டில் இருந்து சிறைபிடித்துக் கொண்டு வரப்பட்ட 12,000 தமிழர்கள் விபீஷணன் காலத்தில் இருந்த குருநாடு எனும் பகுதியில் குடியமர்த்தப் பட்டனர். அன்று முதல் இப்பிரதேசம் ‘புதுக் குருநாடு’ என அழைக்கப்பட்டது. அதுவே பின்பு ‘அளுத்குரு கோரளை’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப் பட்டது. களனி முதல் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசமே அளுத்குரு கோரளை என வழங்கப் பட்டது. எனவே, கி.பி. 2 ஆம் நூற் றாண்டு முதல் இப்பிரதேசம் சோழ நாட்டிலிருந்து கொண்டு வரப் பட்ட தமிழர்கள் வாழ்ந்து வந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.


சந்தேச நூல்களில் களனி விபீஷணன் கோயில்
பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டு முதல் இலங்கை மக்கள் விபீஷணனை மீண்டும் வழிபட ஆரம்பித்தனர். கம்பளை, கோட்டை இராச்சியம் காலப்பகுதியில் இவ்வழிபாடு மேலோங்கி இருந்தது. இதன் காரண மாக  இக்காலப்பகுதியில் எழுதப்பட்ட சிங்கள சந்தேச நூல்களில் களனி விபீஷணன் ஆலயம் பற்றிய செய்யுள்கள் அதிகளவில் பாடப் பட்டன.

இக்காலத் தில் எழுதப்பட்ட மயூர சந்தேச, திசர சந்தேச மற்றும்  1450 ல் எழுதப்பட்ட ‘கோகில சந்தேச’ எனும் நூலிலும் விபீஷணன்  கோயி ல் பற்றிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன. 6 ஆம் பராக்கிரமபாகு காலத் தில் ஶ்ரீ ராகுல தேரரால் எழுதப்பட்ட ‘சலலி ஹினி சந்தேச’ எனும் காவியம் முற்றுமுழுதாக களனி விபீஷணன் மீது பாடப்பட்ட ஒர் நூலாகும். இந்நூலில் ஏராளமான செய்யுள்கள் களனி விபீஷணன் கோயில் பற்றி எழுதப்பட்டுள்ளன. இம்மன்னனின் மகளான உல குடை தேவிக்கு ஓர் ஆண்குழந்தை வரம் வேண்டி களனி விபீஷணன் மீது நாகணவாய் பட்சி பாடல்கள் பாடிச் செல்வதாக இந்நூல் புனை யப்பட்டுள்ளது. இதில் களனி கங்கை பற்றியும் களனி நகரம் பற்றி யும் அங்கு குடிகொண்டு அருள் பாலிக்கும் விபீஷணன் ஆலயம் பற்றியும் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. 

மேலும் 6 ஆம் பராக்கிரமபாகு காலத்தில் எழுதப்பட்ட ஹங்ச சந்தேச எனும் நூலிலும் விபீஷணன் கோயில் பற்றிய செய்யுள்கள் உள் ளன..பொ.ஆ.. 1344 – 1359 ஆம் காலப் பகுதியில் கம்பளையை ஆட்சி செய்த  5 ஆம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் வில்கம் முல தேரரால் எழுதப்பட்ட ‘வூத்த மாலா சந்தேச’ எனும் நூலிலும் களனி விபீஷணன் கோயில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவதாசிகள் இவ்வாலயத்தில் நடனமாடியது பற்றியும் ஓதுவார்கள் தேவாரப் பாட ல்கள் பாடியது பற்றியும் பிராமணர்கள் பூஜைகள் பல செய்து விபீஷணனை வழி பாடு செய்தமை  பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்தேச நூல்களில் களனி விஹாரை யை விட விபீஷணன் ஆலயம் பற்றியே முக்கியமாக பாடல்கள் பாடப்பட்டுள்ளமை இங்கே விசேடமாகக் குறிப்பிடத்தக்க விடய மாகும்.

 விபீஷணன் கோயில் 1575 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் இடித் துத்  தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தின் விக்கிரகங்கள் ஆற்றில் வீசப்பட்டன. 192  ஆண்டுகளின் பின். 1767 இல் கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி ஶ்ரீ ராஜசிங்க மன்ன னின் பெருமுயற்சியின் காரண மான களனி விபீஷணன் கோயிலும் விஹாரையும் மீண்டும் கட்டி யெழுப்பப் பட்டன. இக்காலப் பகுதியில் எழுதப்பட்ட நம்பொத்த எனும் இடப் பெயர்கள் அடங்கிய நூலில் களனி விபீஷணன்  கோயில், களனி விஹா ரை, களனி கித்சிறிமேவன் விஹாரை என்ப வையும் குறிப் பிடப் பட்டுள்ளன. இதன் மூலம் இக்காலப் பகுதியில் இவ்வாலயம் முன்பு இழந்த சிறப்பை மீண்டும் பெற்றது என யூகிக் கக் கூடியதாக உள்ளது.


புராதன இந்து தெய்வச் சிலைகள்
களனி விபீஷணன் கோயில் பல பரிவார மூர்த்திகளைக் கொண்ட தாக இருந்திருக்க வேண்டும். போர்த்துக்கேயரின் அழிவிற்குட்பட்ட இவ்வாலயம் சுமார் 200 வருடங்க ளின் பின்பு மீண்டும் கட்டப்பட்டது. விபீஷணன் கோயிலும், களனி விஹாரையும் ஒரே தடவையில் அழிக்கப்பட்டன. பின்பு இவை கட்டப்பட்டபோது அழிக்கப்பட்ட ஆலயத்தினதும் விஹாரையினதும் எச்சங்கள் கண்டெடுக்கப் பட்டன. இவை இன் றும் களனி விஹாரை வளவில் அமைக்கப் பட்டிருக்கும் அருங்காட்சிச் சாலையில் வைக்கப் பட்டுள்ளன.

இவற்றில் அருங்காட்சியகத்திற்கு வெளியேயும் பல தொல்பொருட் சின்னங்கள் வைக்கப் பட்டுள்ளன. எட்டு துண்டுகளாக போர்த்துக் கேயரால் உடைக்கப்பட்ட கல் வெட்டு மேலம் சில கல்வெட்டுக்கள், துவார பாலகர், கற்சிலை, நாகசிலை, கல்விள க்கு, கல்நீர்த்தொட்டி, புத்தர் சிலையின் உடைந்த கற்சிலை போன்றவையும் காணப் படுகின்றன. இவற்றுடன் ஓர் பாலகிருஷ்ணர் சிலையும், விநாயகர் சிலையும் காண ப்படுகின்றன. கையில் புல்லாங்குழலுடன் நின்று கொண்டிருக்கும் பாலகிருஷ்ணர் ஒரு காலை சற்று மடக்கியபடி நிற்கும் கற்சிலை மிகவும் பழைமை வாய்ந்ததாகத் தெரிகிறது. பிள்ளையார் சிலை பிற்காலத்திற்குரியதாக உள்ளது. இவ்விரண் டுசிலை களுக்கும் தினமும் மலர்கள் வைத்து வணங்கியுள்ளமை யையும் அவதானிக்கக்கூடி யதாக உள்ளது.

இந்துக் கோயிலை ஒத்த கட்டிட அமைப்பு
களனி விஹாரையில் தற்போது காணப்படும் சிலைமனை 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய சிற்பிகளைக் கொண்டு புதுப்பிக்கப் பட்டதாகும். அக்காலப் பகுதியில் பிரபல்யம் பெற்று விளங்கிய நாயக்கர் கட்டிடக் கலைப்பாணியில் இந்துக் கட்டிட மரபுடன் இச் சிலை மனை புதுப்பிக்கப்பட்டது. இதன் விமானம் மட்டுமே கண்டிய கட்டிடக் கலை மரபில் கட்டப் பட்டுள்ளது. ஏனைய பாகங்களான அதிஷ்டானம் மற்றும் தூண்களின் நடுப்பட்டை, பத்மபந்தனம், பலகை, போதிகை ஆகியவையும் ஆலயத்தின் வெளிப்புறமும் மகரதோரணம் கருவறை வாயில் போன்றவற்றின் அமைப்புகளும் ஒர் இந்துக் கோயிலின் அமைப்பை முற்றிலும் ஒத்துள்ளது.


கருவறையில் சமாதி புத்தர் உருவமும் அதன் இருபக்கங்களிலும் உள்ள தனித்தனி அறைகளில் இந்து தெய்வ உருவங்களும் ஸ்தாபி க்கப்பட்டன. இவை முருகனதும் விஸ்ணுவினதுமாக இருக்க வேண் டும் இவ்விரு பரிவாரக் கோஷ்டங்களும் தற்போது திறக்கப்படு வதில்லை. கருவறை வாயிலின் மேற்பாகத்தில் கஜலட்சுமி உருவம் காணப்படுகிறது.

சிலைமனையின்வெளிப்புறச் சுவர்களில் இந்து தெய்வங்கள் 
ஆலயத்தின் வெளிப்புறச் சுவர்களில் இந்து தெய்வங்களின் தேவ கோஷ்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடது பக்க வெளிச்சுவரில் இரண்டு கோஷ்டங்கள் உள்ளன. மூஷிகத்தின் மீது பிள்ளையார் அமர்ந்துள்ளார். அதை அடுத்து நின்ற நிலையில் அம்மன் காணப் படுகிறார். வலது பக்க வெளிச்சுவரில் நான்கு கோஷ்டங்கள் உள் ளன. முதலாவதாக வில்லுடன் இராமரும் நடுப்பகுதியில் புத்த பகவான் சிவனொளி பாத மலையில் தனது பாதத்தைப் பதிப்பது போலவும் கீழே லட்சுமணன் அவரை வணங்கியபடியும் தேவதை கள் வானிலிருந்து புத்தருக்கு பூச்சொரிவது போலவும் கோஷ்டம் அமைக்கப் பட்டுள்ளது. அடுத்ததாக ஆறுமுகங்களுடனும் பன்னிரு கைகளுடனும் முருகப் பெருமான் நின்ற வண்ணமுமான கோஷ்ட மும் அடுத்ததாக நாக மன்னன் மணியக்கிரன் கைகூப்பிய வண்ணம் நின்று கொண்டிருக்கும் உருவ மும் காணப்படுகிறது.


சிலைமனையின் பின்பக்கம்  கருங்கற் கோமுகிகள்
ஆலயத்தின் பின்புறம்  மூன்று கோஷ்டங்கள் அமைக்கப் பட்டு ள்ளன. முதலாவதாக நாத தெய்வமும் நடுப் பகுதியில் விபீஷண னுக்கு இலட்சுமணன் பட்டம் கட்டும் காட்சி யும் மூன்றாவதாக சங்கு, சக்கரத்துடன் விஷ்ணுவும் காணப் படுகின்றனர். இவை தவிர நாக தெய்வத்தி னதும் விஷ்ணு பகவானினதும் கோஷ்டங்களுக்குக் கீழே இரு சிம்மக் கோமுகிகளும் அமைக்கப் பட்டுள்ளன. கோமுகிகள் கருங் கல்லிலும் ஏனைய கட்டிடத்தின் பாகங்கள் சுதையினாலும் அமைக் கப் பட்டுள்ளன. இவ் விரு கோமுகிகளும் கருவறையின் இரு புறங்க ளிலும் காணப்படும் பரிவாரக்  கோயில்களுக்குரியவையாகும். இங்கு இந்துக் கடவுள்களின் கல் விக்கிரகங்கள் இருந்திருக்க வேண்டும். இவற்றிற்கு பூஜை, அபிஷேகம் செய்யத் தெரியாத பௌத்த பிக்குகள் இவ்விக்கிரகங்களை அங்கிருந்து அகற்றியிருக்க வேண்டும். பண்டைய காலத்தில் இங்கிருந்த விக்கிரகங்களுக்கு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற் றிருக்க வேண்டும். தற் போது இப்பரிவாரக் கோயில்கள் பூட்டியபடியே காணப்படுகின் றமை குறிப்பிடத்தக்கது.

என்.கே,எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 




No comments:

Post a Comment