Monday, April 20, 2020

அபூர்வமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நல்லூர் பூதவராயர் கோயில்

அபூர்வமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நல்லூர் பூதவராயர் கோயில் 

என்.கே.எஸ்.திருச்செல்வம்

NKS/137     18 April 2020



    

சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆய்வுகள் மேற்கொண்டிருத்த சமயம் ஒரு தடவை கொழும்பு தேசிய நூல் நிலையத்தில் சில குறிப்புகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்தேன். அப்போது 1958 ஆம் ஆண்டு  சி.எஸ்.நவரத்தினம் அவர்கள் எழுதிய ஓர் ஆங்கில நூலில் ஓர் அபூர்வமான விடயத்தைப் படித்தேன். அதைக் குறிப்பெடுத்துக் கொண்டேன். அது ஓர் அபூர்வமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சைவக் கோயில் பற்றிய குறிப்பு. அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட அக்கோயிலைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டேன். மூன்று நாட்களின் பின் ஓர் சனிக்கிழமை அந்தக் கோயில் உள்ள இடத்துக்கு சென்றேன்.

யாழ்ப்பாணத்தில் நல்லூரில் அந்த கோயில் அமைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் இராஜதானிப் பகுதியில் உள்ள சட்டநாதர் கோயிலின் பின்பக்கம் அமைந்திருந்த பூதவராயர் கோயில் தான் அந்த அபூர்வ வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கோயில். சட்டநாதர் வீதியால் சென்று அரச வீதிக்கு எதிராக உள்ள மணல் தெருவின் ஊடாகத் திரும்பினால் ஓர் குளம் உள்ளது. அக்குளத்தின் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

அங்கு சென்று பார்த்தபோது ஓர் புதிய ஆலயம் அமைக்கப்பட்டிரு ந்தது. இங்கு பழைய ஆலயம் இருந்தமைக்கான அத்தி வாரங்களும் சிதைவுகளும் காணப்பட்டன. வடக்கு நோக்கிய வாசலையுடைய சிறிய கர்ப்பக்கிரகம் மட்டும் கைவிடப்பட்ட நிலையில் காணப் பட்டது. இது யாழ்ப்பாண மன்னர் கால ஆலயத்தின் சிதைவு என்பது தொல்லியல் ஆய்வாளர் பலரின் கருத்தாகும்.

சுதையும்
, செங்கட்டியும் கொண்டு  கட்டப்பட்டுள்ள இவ் வாலயத்தின் கட்டிடக்கலை மரபு இது பழைய ஆலயம் என்பதை உறுதி செய்கிறது. இக்கோயிலின் கர்ப்பக் கிரகம் 8 அடி நீளமும், 8 ½ அடி அகலமும்,  9 அடி உயரமும் உடையது.  6 அங்குல  உயரமுடைய அதன் இரண்டு தளங்கள் வட்ட வடிவிலும் மூன்றாவது தளம் சதுர வடிவிலும் காணப்பட்டன.

இதை அலங்கரிக்கும் தாமரை இதழ்களும், விமானந் தாங்கிய பொம்மைகளும், தாள்வாரமும் பழைய கலை மரபைப் பிரதி பலிக்கின்றன. இதையொத்த பழமையான சிற்ப வேலைப்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வேறு இடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது இங்குள்ள புதிய ஆலயம் பூதவராயர் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், பிரதான தெய்வமாக முருகனே வணங்கப்பட்டு ள்ளார். ஆனால் பலிபீடத்திற் பிரதான வாகனமாக மயிலோடு, பழைய ஆலய எருது வாகனமும் காணப்படுகின்றமை அவதானிக்கத்தக்கது. இது பூதவராயர் ஆலயமாக இருந்து பின்னர் முருகன் ஆலயமாக மாறியதை எடுத்துக் காட்டுகிறது.

இவ்வெருது வாகனம் மட்டுமின்றி புதிய ஆலயத்தின் படிக்கட்டுகளில் வைத்துக் கட்டப்பட்ட பல கற்களும் பழைய ஆலயத்திற்குரியவையாக உள்ளன. இப்பழைய ஆலயத்திற்கு நேர் எதிரே புதிய ஆலயத்திற்குரிய திருக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் இருந்து தான், இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்னர் பழமையான இந்து தெய்வச் சிலைகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 


இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டபோது அதில் இருந்த இந்து விக்கிரகங்கள் ஆலய பூசகர்களால் கிணறுகளிலும், குளங்களிலும் போடப்பட்டதாகவும், மேலும் மண்ணுள் புதைக்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் அவை தற்செயலாக கிடைத்தமையும் பொதுவான வரலாற்று நிகழ்வு ஆகும்.

இதைப் போல் பூதவராயர் ஆலய விக்கிரகங்களும் பாதுகாக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நல்லூர் இராஜதானியில் இருந்த ஏனைய ஆலய விக்கிரகங்களும் இவ்வாறு போடப்பட்டன. பிற்காலத்தில் பூதவராயர், சட்ட நாதர் ஆலய திருக்குளங்களிலும், யமுனா ஏரியிலும் இச்சிலைகள் கிடைத்தன. 

இப்போது நாம் காணும் பூதவராயர் கோயிலுக்கு முன்னோடியாக சங்கிலிய மன்னன் காலத்தில் ஓர் கோயில் கட்டப்பட்டிருந்தது. இக்கோயிலின் அபூர்வமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

பொ.ஆ. 1509 முதல் 1521 வரையான காலப்பகுதியில் கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்தவன் 6ஆம் விஜயபாகு. இவனது மகன்மார்கள் மூவரும் அரியணை போட்டியில் மன்னனை எதிர்த்து நின்று கோட்டை இராச்சியத்தை மூன்றாகத் துண்டாட திட்டம் தீட்டினர். கண்டி இராச்சியம் ஜெயவீர பண்டார என்ற மன்னனின் ஆட்சியில் தனி இராச்சியமாகவும், யாழ்ப்பாண இராச்சியம் சங்கிலி செகராஜசேகரம் என்ற மன்னன் ஆட்சியில் தனி இராச்சியமாகவும் இயங்கியது. இது  போர்த்துக்கேயரின் மதமாற்றங்களுக்கும்
கொடுமைகளுக் கும் சாதகமாக அமைந்தது. 

கோட்டை மன்னன் 6ஆம் விஜயபாகு தனது மூன்று மகன்மார்களால் கொல்லப்பட்டான். கோட்டை இராச்சியம் மூன்றாகத் துண்டாடப் பட்டது. 6 ஆம் விஜயபாகுவின் மூத்தமகன் 7ஆம் புவனேகபாகு கோட்டை இராச்சியத்தின் மன்னனானான். இவன் பொ.ஆ.
 1521 முதல் 1551 வரையான 30 வருடங்கள் ஆட்சி செய்தான். இவன் வயோதிபனாக இருந்த இறுதிக்கால கட்டத்தில் போர்த்துக்கேயர் பெளத்த, இந்து மக்களை மதம் மாற்றும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். போர்த்துக்கேயரின் அட்டூழியங்கள் தலை விரித்தாடிக் கொண்டிருந்த இவ்வேளையில் அவர்களுக்கெதிராக வீறு கொண்டெழுந்தவன் தான் வீதியபண்டார. 

இவன் சுதேச மக்களை ஆயுத முனையில் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பலமாக எதிர்த்தான். இவன் 7ஆம் புவனேகபாகுவின் மருமகனும், மாதம்பை எனும் சிற்றரசின் இளவரசனுமாவான். இவனது மகன் தான் 7ஆம் புவனேகபாகுவின் பின் கோட்டை இராச்சியத்தின் மன்னனான தர்மபால என்பவனாவான்.

7 ஆம் புவனேகபாகு வயோதிபனானபடியால் தனது மருமகன் வீதிய பண்டாரவிடம் கோட்டை இராச்சியத்தை ஒப்படைத்துவிட்டு களனிக்கு சென்று ஓய்வெடுத்தான். 1552 இல் வீதிய பண்டார கோட்டை இராச்சியத்தின் தலைமையை ஏற்று இயங்கினான். போர்த்துக்கேயரின் வன்முறைகளை ஒடுக்க புறப்பட்ட வீதிய பண்டார போர்த்துக்கேயர் கட்டிய கிறிஸ்தவ தேவாலயங்களை அழித்தான். போர்த்துக்கேயர் அழித்த பெளத்த, இந்துக் கோயில்களை மீண்டும் சுதேச நிர்வாகிகளிடம் ஒப்படைத்து அவற்றைப் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டான்.

வீதிய பண்டாரவின் ஆட்சிக்கு போர்த்துக்கேயர் மூலம் மிகப்பெரும் நெருக்கடி ஏற்ப்பட்டது. போர்த்துக்கேயர் வீதிய பண்டாரவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர். இச்சமயத்தில் வீதிய பண்டார கோட்டை இராச்சியத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் தான் வீதிய பண்டாரவைப் போலவே போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ மதமாற்றும் நடவடிக்கைகளையும், அட்டூழியங்களையும் அழிக்க உறுதி கொண்டு போராடி வந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனான சங்கிலியன் வீதிய பண்டாரவிற்கு உதவினான். தனது இராச்சியத்திற்கு வரும்படி வேண்டுகோள் விடுத்தான்.

போர்த்துக்கேயரிடமிருந்து தப்பி கோட்டை இராச்சியத்தின் சொத்து க்களோடு நல்லூர் இராச்சியத்தை ஆண்ட சங்கிலி மன்னனிடம் வந்து சேர்ந்தான் வீதிய பண்டார. சங்கிலிய மன்னனும் போர்த்துக்கேயரை எதிர்த்து வந்தமையால் வீதிய பண்டாரைக்கும், சங்கிலியனுக்கும் இடையில் மிகுந்த நட்பு ஏற்பட்டது. இக்கால கட்டத்திலே தான் எதிர்பாராத விதமாக  நல்லூரில் ஏற்பட்ட வெடி விபத்தொன்றின் போது வீதிய பண்டார கொல்லப்பட்டான்.  தன்னை நாடி தஞ்சமடைந்திருந்த தன் நண்பனின் திடீர் இழப்பு சங்கிலிய மன்னனை வேதனையடையச் செய்தது. தன் நண்பன் வீதிய பண்டாரviன் நினைவாக சங்கிலி மன்னன் ஓர் கோயிலைக் கட்டினான். இக்கோயிலே பூதவராயர் கோயிலாகும். கோயிலின் அருகில் தீர்த்தக் குளத்தையும் வெட்டுவித்தான்.


அந்த வகையில் இவ்வாலயம் கோட்டை இராச்சியத்தின் மன்னன் தர்மபாலனின் தந்தையான வீதிய பண்டாரவின் நினைவாகக் கட்டப் பட்டது என்பதை விட சங்கிலிய மன்னன் காலத்தில் இருந்த தமிழ், சிங்கள நட்பின் நினைவுச் சின்னம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை




No comments:

Post a Comment