Thursday, April 23, 2020

இராவணனின் இராட்சத படைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்த இரட்சத கல் அடுப்பு



இராவணனின் இராட்சத படைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்த     இரட்சத கல் அடுப்பு


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                    NKS/149   23  April 2020
https://nksthiru.blogspot.com/2020/04/blog-post_23.html


























சில வருடங்களுக்கு முன்பு கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றபோது அபூர்வமான ஓர் இடத்தைக் கண்டேன். அதுதான் இராட்சதக் கல் அடுப்பு.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உகந்தை மலை முருகன் கோயில் அமைந்துள்ளது.
உகந்தை முருகன் கோயிலில் இருந்து, குமணபறவைகள் சரணால யம் ஊடாக கும்புக்கன் ஆற்றுக்குச்  செல்லும் காட்டுப் பாதையில் உகந்தையில் இருந்து  4 கி.மீ தூரத்தில் ஓர் வளைவு உள்ளது. அந்த வளைவில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் இன்னுமோர் வளைவு உள்ளது. இரண்டாவது வளைவில் திரும்பியவுடன் அந்த வித்தியாச மான மூன்று கற்களைக் கண்டேன். இந்தக் கற்களுக்கு இடையிலே பாதையை அமைத்துள்ளார்கள். 

சுமார் 10 அடி உயரமும், 10 அடி அகலமும், 12 அடி விட்டமும்  கொண்ட வட்டக் கற்கள் இங்கு காணப்படுகின்றன. பாதையின் வலது பக்கம் ஓர் கல். அங்கிருந்து 11 மீற்றர் தூரத்தில் பாதையின் இடது பக்கம் ஓர் கல். அங்கிருந்து 11 மீற்றர் தூரத்தில் பாதையின் வலது பக்கம் இன்னுமோர் கல். மூன்றாவது கல்லில் "யோத லிப்ப" என சிங்கள மொழியிலும், "GIANT HEARTH" என ஆங்கில மொழியிலும் எழுதப் பட்டிருந்தது.

இவற்றைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரே அளவான மூன்று கற்கள் ஒரே அளவான தூரத்தில் ஓர் அடுப்பு போல அமையும். யாராவது கொண்டு வந்து சம அளவு இடைவெளியில் போட்டார்களா? அல்லது இராவணனின் இராட்சத படைகளால் உருவாக்கப் பட்டதா?  அல்லது இயற்கை விந்தைகளில் ஒன்றா? 
தெரியவில்லை. 

பின்பு இந்தக் கற்கள் பற்றிய விபரங்களை ஆராய வேண்டும் என எண்ணி இது பற்றிய விபரங்களைத் திரட்டியபோது பல ஆச்சரிய மான ஐதீகங்கள் கிடைத்தன. 

அவற்றில் இக்கல் அடுப்பு பற்றிய சில கர்ண பரம்பரைக் கதைக ளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று இராவணனின் இராட்சத படைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்த அடுப்பு இது எனக் கூருகின்றனர். 

இங்கிருந்து தெற்குப்பக்கத்தில் ஓடும் கும்புக்கன் ஆற்றின் பழைய பெயர் கும்பகர்ணன் ஆறு என்பதாகும். இவ்வாற்றின் குறுக்கே இராட்சத அணை கட்டி இப்பகுதியில் நீர்ப்பாசனம் வழங்கிய, கும்பகர்ணன் இப்பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்துள்ளான்.

இராட்சத கல் அடுப்பின் வடக்கில் உள்ள உகந்தை மலையில் இராவணன் சிவனுக்கு கோயில் அமைத்து வழிபாடு  செய்ததாக தாக மாட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. எனவே இப்பகுதி இராவணனின் செல்வாக்கு மிக்க பகுதியாக விளங்கியுள்ளது. இதன் படி இராவணனின் இராட்சதப் படைகள் உணவுப் பிரியனான கும்பகர்ணனுக்கு உணவு சமைத்துக் கொடுத்த அடுப்பாக இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இராட்சதக் கல் எனும் பெயர் மட்டக்களப்பு மான்மியத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆடகசௌந்தரியின் உன்னரசுகிரி இராச்சியத்தில் உள்ள ஓர் குகையில் இராட்சத மனிதர்கள் வாழ்வதாக அரசி கேள்வியுற்றதாகவும், அன்று  இராமன் கனவில் வந்து இங்கிருக்கும் ஓர் குகையில் இராவணனின் நிகும்பலை யாகத்தில் இருந்து வந்த ராட்சசர்கள் வாழ்வதாகவும், இராம மந்திரத்தை உச்சரித்தால் அவர்களை தம் வசப்படுத்த முடியும் எனவும் கூறியதாகவும், அதன் பின்பு அரசி அங்கு சென்று அவர்களை அடிமையாக்கி அவர்கள் வாழ்ந்த குகையை இராட்சதக் கல் எனப் பெயரிட்டதாகவும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இக்குகை இப்பகுதியில் தான் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


அடுத்ததாக வள்ளியம்மன் இந்த அடுப்பிலே தனது வேடர் குலத்தவர் களுக்கு கஞ்சி காய்ச்சி கொடுத்ததாகவும், இதனால் பண்டைய காலத்தில் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை வரும் பெண் பக்தர்கள் இவ்விடத்தில் கஞ்சி காய்ச்சி இப்பாறையின் அடியில் இருந்த வள்ளி யம்மனுக்குப் படைத்து பூஜை செய்துவிட்டு, யாத்திரை வரும் எல் லோருக்கும் கஞ்சி வழங்குவதாகவும் கூறுகின்றனர்.

அடுத்ததாக துட்டகைமுனுவின் பத்து இராட்சத படைத்தளபதிகளு க்கு உணவு சமைத்துக் கொடுத்த அடுப்பு இது எனவும் கூறுகி  ன்றனர்.

இத்தனை பண்டைய கால ஐதீகங்களையும் தாங்கி, மிகவும் கம்பீரமாக, காணப்படும் இந்த இராட்சதக் கல் அடுப்பு கதிர்காம பாதயாத்திரையின் போது நாம் காணும் அற்புதமான இடங்களில் ஒன்றாகும்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 


No comments:

Post a Comment