Saturday, April 25, 2020

கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோட்டை கந்தசுவாமி கோயில்



கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேயரால்  அழிக்கப்பட்ட கோட்டை கந்தசுவாமி கோயில் 


என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                                      NKS/152      25 April 2020


      

சிவ பூமியின் சுவடுகளைத் தேடி நான் சென்ற இடங்களில் ஒன்று தான் பண்டைய கோட்டை இராச்சியம். எனது அன்றைய ஆய்வுப் பயணம் கோட்டை இராச்சியத்தின் தலைநகரில் அமைந்திருந்த கோயில்களைக் கண்டறிவதாகும்.

கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லைக்குச் செல்லும் வீதியில், ராஜகிரிய சந்தியை அடுத்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ள தியவன்னா ஓயா குளத்தின் எதிர்ப் பக்கம் கோட்டை வீதி சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து தெற்குப் பக்கமாக 1.7 கி.மீ தூரம் வரை உள்ள பிரதேசம் உள் கோட்டையாகவும், இங்கிருந்து மேலும் ஓர் கி.மீ தூரத்தில் உள்ள மிரிஹான சந்தி வரையான பிரதேசம் வெளிக் கோட்டையாகவும் பண்டைய காலத்தில் விளங்கின. இவை அத்துள் கோட்டே, பிட்ட கோட்டே என அழைக்கப்படுகின்றன. இவ்விரு கோட்டைகளும் மொத்தமாக            6 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருந்தன. உள் கோட்டை மட்டும்      1.8 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டிருந்தது.

ஓர் முக்கோண வடிவிலான இப்பிரதேசமே சுமார் 600 வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்ற கோட்டை இராச்சியத்தில் தலைநகர் பகுதியாகும். இப்பிரதேசத்தின் வடமுனையில் இருந்து, வடமேற்கு முனை வரை மூன்றரை கி.மீ தூரத்திற்கு கொலன்னாவ கால்வாய் அரணாகவும், வடமுனையில் இருந்து வடகிழக்கு முனை வரையான நான்கு கி.மீ தூரத்திற்கு தியவன்னா ஆறு அரணாகவும் அமைந்திருந்தது. இம்முக்கோண பிரதேசத்தின் தெற்கில் இருந்த கீழ்ப்பகுதி கபோக் என்றழைக்கப்படும் சிவப்பு நிற முருகைக் கற்களினால் கட்டப்பட்ட உயர்ந்த கோட்டை மதில்கள் மூலம் பாதுக்காக்கப் பட்டிருந்தது. இக்கோட்டை இராச்சியத்தில் உள் கோட்டைக்குள்ளும், வெளிக் கோட்டைகுள்ளும் பல கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.   

கோட்டை இராச்சியத்தில் இருந்த கோயில்கள் பற்றிய சிங்கள மொழிக் குறிப்புக்கள் சிலவற்றைத் தேடினேன். அப்போது கொடகே புத்தக சாலையில் இரண்டு முக்கிய நூல்கள் கிடைத்தன. இவை  இரண்டு சந்தேச நூல்களாகும். இந்நூல்களில் பொ.ஆ. 15ஆம் நூற்றாண்டில் கோட்டை இராச்சியம் அமைக்கப்பட்ட பின்பு கட்டப்பட்ட கந்தசுவாமிக் கோயில் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இக்கோயில் கோட்டை மன்னர்களால் பூஜிக்கப் பட்டதாகத் தெரிய வருகிறது. கோகில சந்தேச, பரவி சந்தேச ஆகிய சிங்கள தூது விடு இலக்கியங்களில் கோட்டை கந்தசுவாமி கோவில் பற்றிய பாடல்கள் உள்ளன. கோட்டை அரசமாளிகையின் அருகில் உள் கோட்டையினுள் இக்கோயில் அமைந்திருந்தது.


எனக்குக் கிடைத்த இரு ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு முதலில் அத்துள் கோட்டே பகுதிக்குச் சென்றேன். அங்கே பரகும்பா பிரிவேன எனும் ஓர் பெளத்த விகாரை உள்ளது. அங்கு கோட்டை இராச்சியம் பற்றிய சில தகவல்கள் கிடைத்தன. முக்கியமாக இக்கோட்டை இராச்சியத்தில் நான்கு முனைகளிலும் நான்கு தெய்வங்களுக்குரிய காவற் கோயில்கள் அமைந்திருந்ததாக அங்கிருந்த முக்கியஸ்தர்கள் கூறினர்.
அவற்றையும் எடுத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் கோட்டை இராச்சிய தலைநகரின் சுவடுகளைத் தேடி அலைந்தேன். மாளிகை வீதி, பெத்தகான நினைவுத் தூபி, அழகேஸ்வரர் மாளிகை, உள் கோட்டை அகழி, வெளிக்கோட்டை மதில், கருங்கல் அம்பலம், தலதா மாளிகை ஆகியவற்றை கண்டேன். மாலை 6 மணியாகி  விட்டது. வீடு திரும்பி விட்டேன்.
கிடைக்கப்பெற்ற குறிப்புகளை அன்றிரவு ஆராய்ந்தேன். அப்போது கோட்டை இராச்சியத்தில் கந்தசுவாமிக் கோயில் இருந்த இடத்தை ஓரளவு அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. இருப்பினும் அதை நேரில் சென்று பார்த்து  உறுதி செய்து கொள்ள வேண்டும் என எண்ணினேன்.
அடுத்தநாள் காலை குறிப்பிட்ட இடத்தைத் தேடிச் சென்றேன். அது அது ஓர் மேட்டு நிலம். அங்கு தான் கோட்டை தொல்பொருள் காட்சிச்சாலை அமைந்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோதுதான் பல உண்மைகள் தெரிய வந்தது. அந்த மெட்டு நிலத்தில் தான் கந்தசுவாமி கோயில் அமைந்திருந்ததாக அறியக் கிடைத்தது. அதாவது இக்கோயில் உள்கோட்டைக்குள் அமைந்திருந்தது. அது மட்டுமல்லாது கோயிலின் இரண்டு கற்தூண்களின் துண்டுகளும், கோயிலின் அதிஸ்டானத்தில் இருந்த யாளவரி சிற்பத் துண்டுகள் இரண்டையும்   கண்டேன். இரண்டு நாட்கள் தேடலின் பின்பு இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியாக இருந்தது.


அங்கிருந்த அதிகாரி சில குறிப்புகளைத் தந்தார். கோட்டை இராச்சியம் பற்றிய மேலும் விபரங்கள் தேவை என்றால் கொழும்பு தேசிய நூதனசாலையில் முயற்சி செய்து பாருங்கள் என்றார். அப்போது நேரம் காலை 10 மணி. உடனே கொழும்பு தேசிய நூதனசாலைக்கு விரைந்தேன்.
அங்குள்ள நூலக அதிகாரியை சந்தித்து எனது தேவையை விளக்கினேன். அவர் பழைமை வாய்ந்த ஓர் உசாத்துணை நூலைத் தந்தார். அந்த நூலைப் புரட்டிப் பார்த்தவுடன் வியப்படைந்தேன். நான் எதிர்பார்க்காத, மிகப்பெரிய பொக்கிஷம் அதில் கிடைத்தது. அதுதான் போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்பட்டு சுவடுகள் கூட இல்லாமல் போன கோட்டை கந்தசுவாமிக் கோயில் பற்றிய கல்வெட்டு. அது  பற்றிய ஓர் குறிப்பு அந்நூலில் காணப்பட்டது. நூதனசாலை மூடும் வரையும் கோட்டை இராச்சியம் பற்றிய பல குறிப்புக்களை வாசித்து குறிப்பெடுத்தேன். அவற்றை போட்டோ பிரதி எடுக்க கேட்டேன். அனுமதி கிடைக்கவில்லை. கடைசியில் ஓர் உயர் அதிகாரியோடு பேசி கந்தசுவாமிக் கோயில் பற்றிய கல்வெட்டுக் குறிப்பை மட்டும்  போட்டோ பிரதி எடுத்துக் கொண்டேன்.       
பொ.ஆ. 1415 முதல் 1597 வரை தென்னிலங்கையின் இராச்சியமாக  விளங்கிய கோட்டையில் கந்தசுவாமி கோயில் அமைக்கப் பட்டிருந்தது. கொழும்பு பொரல்லயிலிருந்து பத்தரமுல்ல செல்லும் வீதியில் உள்ள தியவண்ண ஓயாவின் இரு பாலங்களுக்கிடையில் தெற்கு நோக்கி பிட்டகோட்டே வரை உள்ள இடமே கோட்டை இராச்சியத்தின் தலைநகரமாகும். தியவண்ண ஓயாவின் கிளை ஆறுகளாலும், சதுப்பு நிலங்களினாலும் சூழப்பட்டு விளங்கும் இப் பகுதி உயர் மேடுகளையும், பள்ளங்களையும் கொண்ட முக்கோணப் பிரதேசமாகும். தியவண்ண ஓயாவும், அதையண்டிய சதுப்பு நிலப்பகுதியும் இயற்கை அரணாக அமைந்த இப்பகுதி சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் தென்னிலங்கையின் முக்கிய ஆட்சிப் பகுதியாக விளங்கியுள்ளது.

அரச முக்கியத்துவம் பெற்றிருந்த ஆலயம்
கோட்டை கந்தசுவாமிக் கோயில் அரச மாளிகைக்கருகில் உள்கோட்டையில் அமைக்குமளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. அன்று கோட்டை மன்னர்களாலும், இந்து, பௌத்த மக்களாலும் பூஜிக்கப்பட்ட இக்கோயில் ஈ.டபிள்யூ. பெரேரா என்பவரின் வளவிற்கு அருகில் இருந்த மேடான இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
கருங்கற் தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இக் கந்தசுவாமி கோயில் அன்று மகாசேனன் மாளிகை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. சீரும் சிறப்புடனும் விளங்கிய இக்கோயில் போர்த்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டது.
இன்று ஜயவர்தனபுர கோட்டே தொல்பொருட் காட்சிச்சாலை அமைந்திருக்கும் இடம் தான் ஈ.டபிள்யூ. பெரேரா என்பவரின் வீடு இருந்த இடம். இதனருகில் தான் புராதன கந்தசுவாமி கோயில் அமைந்திருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கோயிலின் எஞ்சிய சின்னங்கள் எனக் கருதப்படும் கற்தூண்கள் இரண்டும் மேலும் சில கற்தூண்களும் கோட்டே தொல்பொருட் காட்சிச் சாலையில் இன்றும் காணப்படுகின்றன.

செண்பகப் பெருமாளின் குடும்பத்தினரால் கட்டப்பட்ட ஆலயம்.
கோட்டை இராச்சியத்தை ஆண்ட 6ஆம் பராக்கிமபாகுவின் விசுவாசமிக்க படைத் தளபதியாகவும், குடும்ப நண்பராகவும் விளங்கிய பணிக்கலவன் எனும் தமிழ்த் தளபதியின் மகனே செண்பகப் பெருமாள். இவனின் வீரதீரச் செயல்களினாலும், தனது விசுவாசமிக்க படைத் தளபதியின் நட்பின் பேரினாலும் செண்பகப் பெருமாளை மகனாகத் தத்தெடுத்தான் பராக்கிரமபாகு மன்னன். சுத்த சைவனான செண்பகப் பெருமாளின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் கந்தசுவாமி கோயில் அமைக்கப் பட்டதாகத் தெரியவருகிறது.
மேலும் இவ்வாலயம் பற்றி சலலிஹினி சந்தேச எனும் சிங்கள இலக்கிய நூலில் மகாசேனன் எனும் தேவ அரசனின் மாளிகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை இராச்சிய காலத்தில் முருகனை மகாசேனன் எனவும் பௌத்த மக்கள் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

கோயில் பற்றிய கல்வெட்டும், கற்தூண்களும்
கோட்டை கந்தசுவாமி கோயில் பற்றிய மேலும் பல முக்கிய  சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கோயிலில் பொறிக்கப் பட்டிருந்த தூண் கல்வெட்டு ஒன்றும், மேலும் இக்கோயிலுக்குரிய தூண்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கண்டி வீதியில் 6ஆவது மைல் கல் அருகில் இருக்கும் மதகு ஒன்றின் அடிப்பகுதியில் இருந்து 32 கற்தூண்கள் கண்டுபடிக்கப்பட்டன. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இடிக்கப்பட்ட கோயில்கள் மாளிகைகள் போன்றவற்றின் கற்தூண்கள் கோட்டைகள் கட்டுவதற்கும், தேவாலயங்கள் கட்டுவதற்கும் மட்டுமல்லாது பாதைகள் அமைக்கவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. போர்த்துக்கேயரின் காலத்தில் இடிக்கப்பட்ட கந்தசுவாமி கோயிலின் தூண்களும் பாதைகள் அமைக்கும் பிரசித்திப் பெற்ற ஆங்கிலேய நிறுவனமொன்றினால் மதகு கட்டுவதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரியான ஜோசப் பியர்சன் என்பவரால் மதகின் கீழ்ப்பகுதியில் இத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் 13 தூண்கள் எளிமையான முறையில் சதுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. 11 தூண்களின் அடிப்பகுதியும், உச்சிப் பகுதியும், சதுர வடிவிலும் நடுப்பகுதி எண்கோண வடிவிலும் அமைக்கப் பட்டுள்ளது. 8 தூண்கள் பலவித சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்களாக உள்ளன. மிகுதி ஒரு தூண் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாக உள்ளது. தமிழ்மொழியில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் இத்தூண்கள் கந்தசுவாமி கோயிலுக்குரியவை எனத்தெரிய வருகிறது. 9 வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் கல்வெட்டு கூறும் செய்தி
இக்கல்வெட்டில்  விஜயபாகு தேவரின் 11 ஆவது ஆட்சியாண்டில் வைகாசி மாதம் 10ஆம் நாள் ஒரு பிரதிநிதி மூலம் கந்தசுவாமி கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பிரதிநிதியின் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. வழங்கப்பட்ட தானம் என்ன என்பதும் தெரியவில்லை. இக்கல்வெட்டு மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருக்கும்.
இக்கல்வெட்டும், தூண்களும் கோட்டை இராச்சியத்தில் அமைக்கப் பட்டிருந்த கந்தசுவாமி கோயிலின் எச்சங்களா அல்லது கோட்டைக்கு வெளியே களனிய பகுதியில் அமைந்திருந்த வேறு ஒரு கந்தசுவாமி கோயிலின் எச்சங்களா என்பது மேலாய்வு செய்யப்பட வேண்டும்.
பொ.ஆ. 14ஆம் நூற்றாண்டில் கோட்டை இராச்சியம்  அமைக்கப் பட்ட போது அழகேஸ்வரனால் கோட்டையின் நான்கு மூலைகளிலும் நான்கு காவற்கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றில் சுப்பிரமணியர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலும் மேலே குறிப்பிட்டிருந்த கந்தசுவாமி கோயிலும் ஒரே கோயில்களா அல்லது இருவேறு  கோயில்களா என்பதும் தெரியவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு நாட்கள் பெரு முயற்சியின் பின்னர் கோட்டை இராச்சியத்தில் இருந்து அழிந்து போன ஓர் கோயில் பற்றிய மிக முக்கிய விபரங்களைக் கண்டறிந்ததில் மனம் நிறைந்திருந்தது.  

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை 













No comments:

Post a Comment