தென்னிலங்கையில் இந்து சமய வழிபாடுகளும், அவை தொடர்பான பிராமிக் கல்வெட்டுக்களும்
NKS/121 4 Nov 2019

சிவ வழிபாடு
விஜயன் இலங்கைக்கு வந்த காலத்தில்
தன் அரசாட்சிக்குப் பாது காப்பாக நாலு திக்கிலும் நான்கு சிவாலயங்களைக்
கட்டியதாகவும், தென்னிலங்கையில் மாத்துறையில் சந்திரசேகரஈஸ்வரம் எனும் சிவாலயத்தை
விஜயன் கட்டியதாகவும் யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது.1
தென்னிலங்கையில் தெய்வந்துறை எனும்
தெவிநுவரவில் உள்ள ஒத்பிலிம விகாரை வளாகத்தில் மிகப்பண்டைய இரண்டு சிவலிங்கங் கள்
காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று 7,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், சந்திர
மெளலீஸ்வரர் எனும் இச்சிவலிங்கம் இராவ ணனால் ஸ்தாபிக்கப்பட்டது எனவும், இவ்விரு
லிங்கங்களும் இங்கி ருந்த “நகரீஸ்வர நிலா” எனும்
மிகப்பண்டைய சிவன் கோயிலுக்குரி யவை எனவும் கலாநிதி ஆர். விக்னேஸ்வரன் தனது நூலில்
குறிப் பிட்டுள்ளார்.2
மேலும் கதிர்காமத்தில் ஏமகூடத்தில் மூன்று
கண்களையு டைய சிவலிங்கம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.3 தென்னிலங்கை யில் உள்ள கதிர்காமத்தின் அருகில்
உள்ள கதிர மலையில் மிகப் பண்டைய காலத்தில், முருகனுக்கு முன்பு சிவனே குடி
கொண்டி ருந்ததாக ஆய்வாளர் தனேஷ் கொடிப்பிலி ஆரச்சி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.4
கதிர்காமத்தில் உள்ள ஏழு மலைகளில் ஒன்று சிவனுக்குரிய மலையாகும். இது
விபூதி மலை என பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டது. இங்கு சிவன்
குடிகொண்டிருந்ததாகவும், பின்பு இம்மலை முருகனுக்கு சிவனால் நன்கொடையாக
வழங்கப் பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.5
பண்டைய காலத்தில் ஏதி என்பவன் முருகுபுரம்
என்னு மிடத்தை தலைநகராக்கி இலங்கையை ஆண்டு வந்ததாகவும், முருகனின் சேனா திபதியின்
வீரனான விசுவ என்பவன் இங்கு ஓர் சிவாலய த்தைக் கட்டி அதற்கு முருகேசுவரம் எனப்
பெயரிட்ட தாகவும், இவ்விடம் ஏமகூடம், கார்த்திகேயபுரம், கதிர்வேலன் மலை,
கதிர்காமம், மாணிக்க கங்கை, கந்தவேள் கோயில் எனும் பெயர்களில் அழைக்கப்பட்டதாகவும்
அகத்தியர் இலங்கை எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.6 முருகன்
பாடிவீடு அமைத்து சிவனை வழிபட்ட இடம் கதிரமலை என பூர்வீக சப்த தலங்கள் எனும்
நூலில் கூறப்பட்டுள்ளது.7
தென்னிலங்கையில் யாள காட்டிற்குள் அமைந்துள்ள
சித்துள் பவ்வ எனும் சித்தர் மலை, மகுள்
மகாவிகாரை மற்றும் கதிர்காமம், திஸ்ஸமகராமை,
சந்தகிரி, யாட்டால, ரம்பா விகாரை ஆகிய இடங்
களில் மிகப்பழமை வாய்ந்த சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்களில்
மொத்தமாக 12 லிங்கங்கள் உள்ளன. கதிர்காமத் தில் மட்டும் நான்கு சிவலிங்கங்கள்
காணப்படுகின்றன. வளவ கங்கையின்
தென்பகுதியில் அமைந்துள்ள ரம்பா விகாரையில் சிவ லிங்கங்கள், ஆவுடையார் ஆகியவை
காணப்படுகின்றன. இந்த சிவ லிங்கங்கள் எல்லாம் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தவை
என்பது குறிப் பிடத்தக்கது. 7a, 8
யாள
காட்டிற்குள் சிவநகரம் எனும் பெயரில் சிவ வழிபாடு நிலவிய ஓர் இடம் இருந்தது பற்றி
சித்துள் பவ்வ எனும் சித்தர் மலையில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.8a மேற்சொன்ன
விடயங்கள் மூலம் பண்டைய காலத்தில் தென்னிலங்கையில் சிவ வழிபாடு பல இடங்களில்
நிலவியுள்ளமை உறுதியாகத் தெரிகின்றது.
நாக
வழிபாடு
தென்னிலங்கையில் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டில் மகாகம எனும் ஓர் இராச்சியத்தை அமைத்தவன் தேவநம்பிய தீசனின் சகோத ரனான மகாநாகன் என்பவனே.9 இவன் ஓர் நாக மன்ன னாவான். இவன் அமைத்த மகாகம இராச்சியத்தில் முதன் முதலாக நாகமகா விகாரை எனும் வழிபாட்டுத் தலத்தை இவன் அமைத்தான். தேவநம் பியதீசனின் பின் அரசனாக வேண்டியவன் என்பதால் இவன் “உப ராஜா மகாநாகன்” என அழைக்கப்பட்டான். தென்னிலங்கையில் கிரிந்த, திஸ்ஸமகராம ஆகிய இடங்களில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் தவறான நம்பிக்கை களை உடைய (இந்து சமய நம்பிக்கைகள்) இவன் புத்தமதத்தைத் தழுவினான் எனக் கூறப் பட்டுள்ளது.10
தென்னிலங்கையில் திஸ்ஸமஹாராமையின் அருகில் இருந்த “நநிகிரி” எனும் இடம் பற்றி பொ.ஆ 2ஆம் நூற்றாண்டிற்குரிய தொல மியின் வரை படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாகவழிபாடு நில விய இடம் என அறிஞர்கள் கூறியுள்ளனர். பொ.ஆ. 1ஆம் நூற்றா ண்டில் திஸ்ஸமஹாராமையில் இருந்த நாக மாஹாவிகாரை ஈழநாகன் எனும் மன்னனால் புனரமைக்கப்பட்டது. மேலும் தொலமியின் வரை படம் குறிப்பிடும் “நசடும” எனும் நாகரின் நகரமும் இப்பகுதியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.11
ரம்பா விகாரை அமைந்துள்ள பகுதி ஓர் பண்டைய நாக வழி பாட்டுத் தலமாகும். இதன் பண்டைய பெயர் மகாநாககுளம் என்ப தாகும். மகாநாககுளம் நகரின் முக்கிய வழிபாட்டிடமான ரம்பா விகா ரையை நாகசேனன் எனும் துறவி பராமரித்து வந்ததாக வரலற்று குறிப்புகள் கூறுகின்றன.12
மேற்சொன்ன இடங்களைத் தவிர நாகவழிபாடு நிலவிய பத்து க்கும் மேற்பட்ட வழிபாட்டுத்தலங்கள் தென்னிலங்கையில் இருந் தன. இவை நாகமலை, நாககல்லு, நாகவில்லு, நாககுளம், நாகதுறை, நாக கண்டி, நாகமடு, நாகதொடுவாய், நாகவத்த, நாகபவத்த, நாகஹெல, நாகவல, நாககுளி போன்ற நாக வழிபாடு தொடர்பான இடங்கள் பல உள்ளன. தற்பொழுது இவை நாக விகாரை எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன.
முருக
வழிபாடு
தென்னிலங்கைப் பகுதியில் முதன் முதலாக ஓர்
இராச்சிய த்தை அமைத்து ஆட்சி செய்தவர்கள் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த கதிர் காம சத்திரியர்களே. மகாநாகனுக்கு முன்பே,
பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டில் கதிர்காமத்தை
தலைநகராகக் கொண்ட கஜரகம எனும் இராச்சியத்தை இவர்களே ஆட்சி செய்தனர்.
அனுராதபுரத் தில் நடை பெற்ற வெள்ளரசுமரம் நடுகை விழாவுக்கு தேவநம்பிய தீசனால் இவர்கள் அழைக்கப்பட்டமை பற்றி மகாவம்சம் கூறுகிறது.13
இவர்கள் முருக வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவர் களாக விளங்கிதோடு, பெளத்த சமயத்தையும் ஆதரித்து வந்தனர். இவர்கள் ஐந்து
பரம்பரையாக கஜரகம இராச்சியத்தின் மன்னர் களாக விளங்கினர். தேவநம்பிய தீசனின்
காலத்தில் இருந்து அவனின் தம்பியான மகாநாகன், அவனின் மகனான யட்டாலதீசன், அவனின் மகனான
கோத்தாபயன் வரை இவர்களின் பத்து சகோதரர்கள் கஜரகம இராச்சி யத்தை ஆட்சிசெய்து வந்த
வேளையில், முருக வழிபாட்டை மேற் கொண்ட இவர்கள் பெளத்த சமயத்திற்கு மதம்மாறியமை பற்றி
பிரா மிக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன.14
கோதாபயனால் இந்த பாண்டிய சத்திரிய மன்னர்கள்
அனைவ ரும் கொல்லப்பட்டு, அதற்குப் பிராயச்சித்தமாக அவன் 500 விகாரை களை
இப்பகுதியில் கட்டினான் என தாதுவம்சம் கூறுகிறது. முருக வழிபாட்டில் மிகுந்த
ஈடுபாடு கொண்ட கதிர்காம பாண்டிய சத்திரியர் களைக் கொன்று, இப்பகுதியில் 500
விகாரைகளைக் கட்டியதாக கூறப்பட்டுள்ள இச்செய்தி, பெளத்தம் இந்து வழிபாட்டி டமாகிய
இப்பிரதேசத்தில் நிலை கொண்டமையும், அரச ஆதரவுடன் அது பரவியமை யையுமே எடுத்துக்
காட்டுகிறது.15
தமிழ் மன்னன் எல்லாளனின் வீரர்களில் ஒருவனான
கதிரன் என்பவனால் கந்தசுவாமிக் கடவுளுக்கு இங்கு கோயில் கட்டி வழிபடப்
பட்டதாகவும், கதிரனின் பெயரில் இவ்விடம் கதிர்காமம் எனப் பெயர் பெற்றதாகவும்
சிங்கள மக்கள் கூறுகின்றனர்.16 கதிர்காமத்தில்
கந்தசுவாமிக் கோயில் இருந்தமையும், எல்லாளனை வெற்றி கொண்ட துட்டகைமுனு இக்கோயிலை
புனரமைத்தமை பற்றியும் கந்த உபத்த எனும் நூல் கூறுகிறது.17 மகாவம்சம்
தவிர்ந்த ஏனைய பண்டைய சிங்கள நூல்கள் இவ்விடயம் பற்றிக் கூறுகின்றன.
விஷ்ணு
வழிபாடு
பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில், 2 ஆம் தப்புல
மன்னன் காலத் தில் தென்னிலங்கையில் விஷ்ணு வழிபாடும் மேலோங்கிக் காணப் பட்டது.18 இதன்
காரணமாகவே தென்னிலங்கையின் காவல் தெய்வங்களாக கதிர்காமக் கந்தனும், தெய்வந்துறை விஷ்ணுவும் அன்று முதல் இன்று வரை
விளங்குகின்றனர்.
சிவ
வழிபாடு தொடர்பான கல்வெட்டுக்கள்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பிராமிக்
கல்வெட்டுக ளில் காணப்படும்,சிவவழிபாட்டைக் கடைப்பிடித்தோரின் பெயர் கள், தென்னி
லங்கையில் இவ்வழிபாட்டின் தொன்மையை மேலும் உறுதி செய்யும் ஆதாரங்களாக
விளங்குகின்றன. சிவ என்ற பெயருடன் சிவபூதிய, சிவதத்த, சிவகுத்த சிவரக்கித்த போன்ற
அடைமொழிகளும் சேர்ந்து இப்பெயர்கள் கல்வெட்டுகளில் பொறி க்கப்பட்டுள்ளன.19 இவ்வாறான,
சிவன் தொடர்பான 13 கல்வெட்டு கள் அம்பாந் தோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.20
சிவபூதிய என்பது சிவனின் அருளைப் பெற்றவன்
எனவும், சிவ தத்த என்பது சிவனால் வழங்கப்பட்டவன் எனவும், சிவகுத்த, சிவரக் கித்த
போன்ற பெயர்கள் சிவனால் பாதுகாக்கப்பட்டவன் எனவும் பொருள் படுவதாக பேராசிரியர்
சி.க.சிற்றம்பலம் தனது நூலில் குறிப் பிட்டுள்ளார்.21
நாக
வழிபாடு தொடர்பான கல்வெட்டுக்கள்
தென்னிலங்கையில் நாகவழிபாடு தொடர்பான 6
பிராமிக் கல் வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் “பருமகன்” என்ற
பட்ட த்துடன் சேர்த்தே நாகன் எனும் பெயர் அதிகளவில் காணப் படுவதால், இப்பகுதியில்
நாக வணக்கத்தைக் கடைப்பிடித்தோர் அரச பிரதானிகளாகவோ அல்லது தலைவர்களாகவோ
இருந்திருக்க வேண்டும்.22 மேலும் நாக யுவராஜன் பற்றிய
கல்வெட்டுக்களும் தென்னிலங்கையில் காணப்படுகின்றன. இது நாக சிற்றரசன் எனப்
பொருள்படும்.23
தென்னிலங்கையில் மொத்தமாக 6 கல்வெட்டுக்களில்
முருக னின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேலன், குமரன் ஆகிய பெயர்கள்
காணப்படுகின்றன. இப்பெயர்கள் முருகனைக் குறிக்கும் பெயர்களாகும். பண்டைய காலத்தில்
முருகனை வழிபட்டோரே இப் பெயர்களைக் கொண்டுள்ளனர். இவர்களே பெளத்த சங்கத்திற்கு தங்
கள் குகைகளைத் தானம் செய்துள்ளனர். இலங்கை பிராமிக் கல்வெ ட்டுகளில் காணப்படும்
இப்பெயர்கள் பற்றி பேராசிரியர் சிற்றம்பலம் தனது நூலில், “வேலன்
வழிபாட்டு மரபு ஈழத்திலும் அன்று காணப்பட்டதைப் பிராமிக் கல்வெட்டு களில்
காணப்படும் வேல என்ற பதம் எடுத்துக் காட்டுகிறது” எனக்
கூறியுள்ளார்.24
சுவாமி
எனும் சொல் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்
தென்னிலங்கையில் மொத்தமாக 29
கல்வெட்டுக்களில் சுவாமி எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. சுவாமி எனும்
பொருள்படும் “பத்த”எனும் சொல் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.25 பத்த எனும்
பதத்தை பேராசிரியர் பரணவிதான ஆங்கிலத்தில் “Lord” எனவும்,26 பூஜ்ய
எல்லாவல மேதானந்த தேரர் “சுவாமி” என சிங்கள
மொழி யிலும் மொழி பெயர்த்துள்ளனர்.27 என்பதை முன்பே
குறிப் பிட்டுள்ளேன்.
பிராமணர்
எனும் சொல் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்
பிராமணர் எனும் பொருள்படும் “பமண” என்ற சொல்
பொறிக் கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் இலங்கையில் காணப்படுகின்றன.
இவற்றில் 3 பிராமிக் கல்வெட்டுக்கள் மட்டுமே
தென்னிலங்கையில் காணப்படுகின்றன.28 இருப்பினும் தென்னி லங்கையில் பிராமணர் தொடர்பான பல இடங்கள்
உள்ளன. பமுனுகம, பமுனுகொட்டுவ, அக்ரஹார, பிராமணதொட்ட போன்ற இடங்கள்
தென்னிலங்கையில் காணப்படுவதால் இப்பகுதியில் பிராமணர்களின் செல்வாக்கு
குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள் ளது எனக் கூறலாம்.
பெருமகன்,
மருமகன் ஆகிய தமிழ்ச் சொற்கள் உள்ள கல்வெட்டுகள்
தென்னிலங்கையில்
பெருமகன் எனும் பொருள்படும் “பருமக” என்ற பதம்
பொறிக்கப்பட்ட 34 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படு கின்றன. இவற்றில் அதிகமானவை
சித்துல்பவ்வ-கொரவக்கல என்னு மிடத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளன.29
தமிழில் பருமகன், அல்லது பெருமகன் எனும் சொல் தலைவன், அரசன்,
உயர்ந்தவன் எனப் பொருள்படுகிறது என முன்பே குறிப்பிட்டுள்ளேன். மருமகன் எனும்
தமிழ்ச் சொல் பொறிக்கப்பட்ட 6 கல்வெட்டுகள் தென்னி லங்கையில் காணப்படுகின்றன.30
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை
No comments:
Post a Comment